தமிழக அரசியலில் இப்போது ஒரு புதிய அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மற்றும் சட்டப்பேரவை விவாதங்கள் ஒரு பக்கம் விவாதிக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்களின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. “கிறிஸ்டியன் மயமாகும் சட்டசபை… தமிழை இழிவுபடுத்திய மரிய வில்சன்!” என்று இணையங்களில் அனல் பறக்க விவாதங்கள் பொய் கொண்டிருக்க சில அரசியல் கட்சி தலைவர்கள் மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்..என்ன தான் நடக்கிறது தமிழக அரசியலில்.. விரிவாக பார்க்கலாம் தற்பொழுது,
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதாவது, நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இது தமிழ் ஆர்வலர் என்ற முறையில் எழுப்பப்பட்ட ஒரு நியாயமான விமர்சனமாகவே பார்க்கப்பட்டது.
ஆனால், இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “நான் பிறப்பால் கிறிஸ்தவன். எனக்கு கிறிஸ்தவம் அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழியை கற்றுக்கொடுத்திருக்கிறது” என்று ஆவேசமாகக் கூறினார்.
நிதியமைச்சரின் இந்தப் பேச்சுக்குத் தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இதுகுறித்து ஒரு தீவிர அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் என்ன சொல்கிறார் என்றால், “கிறிஸ்துவ மொழி அன்பு, கருணை, இரக்கம் சொல்லித் தந்தது என்றால், தமிழ் மொழி எதுவும் சொல்லித் தரவில்லை என்பதே இதன் பொருளாக அமைகிறது. ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி’ என்பதை உலகமே அறியும். கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னாலேயே தமிழ் மொழி தோன்றியது. அப்படியிருக்கும்போது, தான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தை உயர்த்திப் பிடிக்கிறேன் என்ற நோக்கில் அமைச்சர் தமிழ் மொழியை சிறுமைப்படுத்திவிட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “சட்டசபைக் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையைக் கொண்டுவரும்போதே ஜெபமாலையைக் கொண்டு வந்தார். அதைக் கூட ஒருவரின் தனிப்பட்ட மத நம்பிக்கையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தமிழில் பிழை இல்லாமல் பேசுங்கள் என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கேட்டவுடன், உடனடியாக கிறிஸ்தவத்தை அவர் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பல முக்கியப் புள்ளிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதாவது, “இதிகாசங்களும் காப்பியங்களும் தேவாரமும், திருவாசகமும், திருவருட்பாவும், திருவெம்பாவையும் என்று எண்ணற்ற பக்தி இலக்கியங்களைக் கொண்டது நம் தமிழ் மொழி. ஆனால், தமிழ்மொழி தெரியாத ஒரு தலைமுறை உருவாகி வந்துள்ளதுதான் திராவிட அரசியல் ஆட்சி செய்ததன் சாதனை!” என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், “பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது” என்று அமைச்சர் கூறியதுடன், தனது பேச்சு நடையை யாருக்காகவும் மாற்ற மாட்டேன் என்று ஆவேசமாக அறிவித்ததாகவும், சபை மாண்பு சிறிதும் இன்றி ஒலிபெருக்கியைத் தள்ளிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையில் நீண்ட அனுபவம் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒருவர், தமிழில் பிழைகள் ஏற்படுவதை இயல்பாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தமிழ் படித்தவர்களுக்கே அன்பு தெரியாது என்று சொல்வது ஆணவத்தின் உச்சம் என்றும் அந்த அறிக்கையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
“தமிழுக்காக எதையும் செய்வோம், தமிழ் எங்கள் உயிர்” என்றெல்லாம் முழங்கும் தி.மு.கவினரும் போலித் தமிழ் ஆர்வலர்களும் அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? இது சிறுபான்மைத் தாஜா அரசியல் கிடையாது என்றால் வேறு என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கும் இந்து முன்னணி, உலகே போற்றும் தமிழ் மொழியை குறைத்து மதிப்பிட்டதற்காக நிதியமைச்சர் மரிய வில்சன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மொத்தத்தில், தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் தீயைப் பற்றவைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்! இதுகுறித்த உங்களின் கருத்துக்களைத் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள். நன்றி…

