PM Modi: இளைஞர்களின்மீது நம்பிக்கை!

Advertisements

இந்தியாவில் இளைஞர்களின் சக்தி பெரியதாக உள்ளது. அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க சட்டங்கள்குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.

அந்த வகையில் முத்தலாக் முறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி இஸ்லாமிய தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் நீதி வழங்கப்பட்டதாகப் பிரதமர் மோடி கூறினார். மாற்றுப் பாலினத்தவர்களுக்கு நீதி வழங்கும் சட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் சட்டம் போன்றவையும் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த நாடாளுமன்றத்தில் தான் காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். புதிய ஆற்றல், விழிப்புணர்வு மூலம் இந்தியா மீண்டெழுந்திருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இதன்மூலம் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னேறிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது நமது பெருமை என்றும், இந்தியாவில் இளைஞர்களின் சக்தி பெரியதாக உள்ளது. அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலகில் திறமைவாய்ந்த மனித சக்தியின் தேவை உள்ளது என்றும், இந்தியா அந்தச் சக்தியைப் பயன்படுத்தி முன்னேறி வருகிறது என்றும், இந்தியர்கள் எங்குச் சென்றாலும் நன்மையை விளைவித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். மேலும் பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அரசியல் சாசனத்துக்கு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில்தான் வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய எதிர்காலத்தின் தொடக்கத்தை காணப் போவதாகவும் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் உறுதிப்பாட்டுடன் புதிய நாடாளுமன்றத்துக்கு செல்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இன்நிலையில் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் அமா்வு பழைய கட்டடத்தில் நேற்று நிறைவடைந்த பின்னா் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்றத்தில் கூடிய முதல் மக்களவை கூட்டத்தில் இந்த மசோதாவை சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் பேசியதாவது:

மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலான கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவையின் மூன்று பதவிக்காலங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவித்தார்.

இந்த மசோதா மீதான விவாதம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், மாநிலங்களவையில் வியாழக்கிழமை இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *