மனோஜ் பாண்டியனை திமுகவில் சேர்த்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்.!

Advertisements
ஆலங்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன் திடீரென முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் ஏன் திமுகவில் இணைந்தார்? திமுக மேலிடம் அவரை ஏன் இணைத்துக் கொண்டது?இதன் பின்னணியில் என்ன நடந்தது? தற்போது நெல்லை திமுகவில் என்ன நடக்கிறது என்பது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
ஒரு காலத்தில் தமிழக அரசியல் களத்தில் கொடி கட்டி பறந்தவர் பி எச் பாண்டியன்.  சட்டசபைக்கு நீதிமன்றத்தையும் தாண்டி வானளாவிய அதிகாரம் உண்டு என குரல் கொடுத்தவர் இவர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்த பேரி என்ற இடத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான பி.எச் பாண்டியன் 1972 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோதே அக்கட்சியில் இணைந்தவர் .
அதிமுக வழக்கறிஞர் அணியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தவர் பின்னர் 1977 ஆம் ஆண்டு 1980 ஆம் ஆண்டு 1984 ஆம் ஆண்டு எனத் தொடர்ச்சியாக அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் . 1989 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து பிரிந்த விஎன் ஜானகி அணியில் வெற்றி பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் இவர் தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் .
1980 ஆம் ஆண்டு முதல் 85 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவராக பதவி வகித்தார். பின்னர் சட்டமன்ற சபாநாயகர் ஆகவும் பதவி வைத்தார். இவர் சட்டப்பேரவை தலைவராக இருந்த காலகட்டத்தில் சட்ட நகலை எரித்த காரணத்திற்காக ஒன்பது திமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தார் .
1984 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை திமுகவுக்கு எதிரான செயல்பாடுகளில் பி எச் பாண்டியன் கொடி கட்டி பறந்தார் அப்போது திமுகவில் 22 எம்எல்ஏக்கள் தான் இருந்தார்கள் இவர்களில் 10 பேரை டிஸ்மிஸ் செய்து திமுகவின் பலத்தை 12 ஆக குறைத்தவர். அந்த வகையில் பி எச் பாண்டியனுக்கும் திமுகவிற்கும் கடைசிவரை மோதல் சூழ்நிலைதான் நீடித்தது .
முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன் மகன் தான் மனோஜ் பாண்டியன்.  கடந்த 2001 சட்டமன்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் .
வழக்கறிஞரான இவர் அதிமுகவில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் வழக்கறிஞர் அணி இணை செயலாளர் அதிமுக அமைப்புச் செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தவர் . எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். . ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டவர் மனோஜ் பாண்டியன் .
இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனோஜ் பாண்டியன் வாதாடி வந்தார் . இதற்கிடையே சசிகலா டிடிவி தினகரன் ஆகியோருடன் ஓ பன்னீர்செல்வம்  கைகோர்த்ததால் மனோஜ் பாண்டியன் அதிருப்தி அடைந்தார் . இந்த நிலைப்பாடு பிடிக்காமல் சமீபகாலமாக அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார் . இந்த சூழ்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தார் .
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைவதற்கான அனைத்து பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தான் முன் நின்று செய்துள்ளார். மனோஜ் பாண்டியனுக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதி ஒதுக்கி தரப்படுவதாக திமுக தரப்பில் வாக்குறுதி தரப்பட்டதாக சொல்லப்படுகிறது . தற்போது மனோஜ் பாண்டியன் வருகை நெல்லை மாவட்ட திமுகவில் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் திமுக தரப்பில் சர்ச்சையை கிளப்பி உள்ளது .
தற்பொழுது திமுகவில் அமைச்சர்களாக இருப்பவர்களில் எட்டு பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் முத்துசாமி ரகுபதி கண்ணப்பன் சேகர்பாபு செந்தில் பாலாஜி அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவார்கள். இதேபோல் அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த மருது அழகுராஜ் அன்வர் ராஜா மைத்ரேகன்உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்துள்ளனர் .
அதிமுகவில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்களை திமுகவில் இணைப்பதுடன் அவர்களுக்கு முக்கிய பதவியும் தருவது தொடர்பாக திமுகவில் குழப்ப சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது . கலைஞர் காலம் முதல் ஓடாக தேய்ந்து இன்று வரை கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.  தற்போது அதிமுகவிலிருந்து வருபவர்கள் உடனடியாக முக்கியபதவிகளை பெற்று விடுகிறார்கள் என்ற கொந்தளிப்பு திமுகவில் நிலவி வருகிறது.
இந்த நிலையில் , ஏற்கனவே திருநெல்வேலி திமுகவில் சபாநாயகர் அப்பாவு ஒரு கோஷ்ட முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஒரு கோஷ்டி என நான்கு கோஷ்டிகள் இருக்கின்றன தற்பொழுது மனோஜ் பாண்டியன் வருகையால் ஐந்தாவது கோஷ்டி உருவாகி இருப்பதாக சொல்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக தரப்பில் சீட்டு உறுதி என்ற உத்திர வாதம் அளித்து தான் மனோஜ் பாண்டியனை அமைச்சர் சேகர்பாபு அழைத்து வந்துள்ளார் .
அந்த வகையில் ஏற்கனவே ஆலங்குளத்தில் வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியனுக்கு இந்த முறை அந்த தொகுதிக்கு பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது . இதற்குப் பின்னணியில் சில காரணங்கள் இருக்கின்றன
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் தொகுதியில் மூன்று முறை திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருக்கிறார். இந்த முறையும் அவர் அங்கு சீட் கேட்டு வரும் நிலையில் மீண்டும் அவரை அம்பாசமுத்திரத்தில் நிறுத்தினால் ஜெயிப்பது சிரமம் என திமுக மேலிடம் கருதுகிறது .
இந்த முறை அம்பாசமுத்திரம் தொகுதியில்,  அதிமுக சார்பில் இசக்கி சுப்பையா வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல் கசிந்து உள்ள நிலையில் இசக்கி சுப்பையாவுக்கு அந்தப் பகுதியில் ஏராளமான செல்வாக்குண்டு. அம்பாசமுத்திரம் தொகுதி தற்பொழுது திமுகவுக்கு பலகீனமாக இருக்கிறது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் தான் மனோஜ் பாண்டியனை திமுகவில் சேர்த்துக் கொண்டதாக தெரிகிறது . மனோஜ் பாண்டியன் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதுடன் அனைத்து தரப்பினருடனும் நட்பாக இருப்பவர். அவரது தந்தை பி எச் பாண்டியன் காலம் முதல் இந்த பகுதியில் அவருக்கு செல்வாக்கு இருந்து வருகிறது .
மனோஜ் பாண்டியனை பொறுத்தவரையில் ஆலங்குளம் அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் எங்கு போட்டுயிட்டாலும் வெற்றி பெறுவார் . இருந்த போதிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெறுவதற்காக தான் மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே வேளையில் ஆவுடையப்பனை சமாதானம் செய்வதற்காகவும் திமுக மேலிடம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது . ஆலங்குளம் தொகுதியை பொறுத்தவரையில் நாடார்களும் முக்குலத்தோர்களும் அதிகமாக வசிக்கும் தொகுதி ஆகும் . கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் இங்கே பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி நாடார் தனியாக போட்டியிட்டு சுமார் 37,000 வாக்குகளை பிரித்து மூன்றாவது இடத்தை பிடித்தார் . இந்த முறையும் ஹரி நாடார் ராக்கெட் ராஜா உள்ளிட்ட நாடார் சமுதாயத்து பிரபலங்கள் போட்டியிடலாம் என திமுக மேல் இடத்திற்கு தெரிய வந்துள்ளது .
ஒருவேளை அவர்கள் களம் இறங்கினால் நாடார் சமூக வாக்குகள் சிதறும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஆவுடையப்பனை ஆலங்குளம் தொகுதியில் நிறுத்தினால் ஆலங்குளம் தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என்று மேல் இடம் கணக்கு போட்டு இருக்கிறது . எனவே ஆலங்குளம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளை கைப்பற்றும் நோக்கத்தின் அடிப்படையில் தான் திமுகவில் மனோஜ் பாண்டியன் இணைக்கப்பட்டுள்ளார் .
அம்பாசமுத்திரம் தொகுதியில் ஏற்கனவே திமுக ஆதரவு ஓட்டுகளும் மனோஜ் பாண்டியன் ஆதரவு ஓட்டுகளும் வெற்றியை பெற்று தரும் என்று திமுக தரப்பில் நம்பப்படுகிறது . ஆனால் அதே சமயம் தற்பொழுது திருநெல்வேலி திமுகவில் கோஷ்டி பிரிவினை தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது .
புதிதாக மனோஜ் பாண்டியன் தலைமையில் ஒரு புதிய கோஷ்டி உருவாகும் என்ற நிலையில் திமுக மேலிடம் இதனை எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசும்போது அதிமுகவிலிருந்து இன்னும் முக்கிய பிரமுகர்கள் சிலர் திமுகவில் இணைவார்கள் என்ற பரபரப்பு தகவலை தெரிவித்து இருக்கிறார்
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் திமுகவில் விரைவில் இணைவார் என தெரிய வந்திருக்கிறது . இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல தொகுதிகளில் அதிமுக செல்வாக்கு பெற்றவர்கள் அந்த கட்சியை விட்டு விலகி வந்தால் அவர்களை திமுகவில் சேர்த்துக் கொள்வது தங்களுக்கு அதிக பணம் தரும் என திமுக மேலிடம் கணக்கு போட்டு திரை மறைவில் மிகப்பெரிய பின்னணி வேலைகளை செய்து வருகிறார்கள் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *