Manjakuppam TASMAC Salesman: டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

கடலூர் மஞ்சக்குப்பம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

கடலூர் மஞ்சக்குப்பம் அருகே உள்ள, ஆல்பேட்டை கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன் (50). இவர் சிதம்பரத்தில் உள்ள எலைட் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மோகன் தனது குடும்பத்தினருடன் நள்ளிரவு வீட்டின் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் நபர் மோகனை தொடர்பு கொண்டு அவரது வீட்டின் வெளியே தீப்பிடித்து எரிவதாக கூறினார். இதனால் பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்த மோகன் பார்த்தபோது, வீட்டின் கதவு வெளியே இருந்த ஸ்கிரீன் எரிந்து கொண்டிருந்தது.

இதன் பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அங்கு கண்ணாடி பாட்டில் துண்டுகள் சிதறி கிடந்தன. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் மோகன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி சென்றது தெரியவந்தது. அது வீட்டின் சுவரில் பட்டு கீழே விழுந்து ஸ்கிரீன் முழுவதும் இருந்து சேதமானது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

மேலும் மோகனிடம் போலீசார் அவருக்கு முன் விரோதம் ஏதும் உள்ளதா? பெட்ரோல் குண்டு வீசி சென்ற நபர்கள் குறித்து எதுவும் தெரியுமா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் கூறுகையில் தனக்கு முன் விரோதம் எதுவும் இல்லை என்றும், அந்த நபர்கள் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறினார். தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார் தொடர்ந்து கடலூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *