
கடலூர் அருகே உள்ள அங்காளம்மன் பாவாடைராயன் கோவிலை, நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத்திற்காக இடிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சிக்குப் பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் என்.எல்.சி நிலக்கரி சுரங்கம் தொடர்பாகப் பதிவிட்டுள்ளார். அதில், கடலூர் மாவட்டம் மேலூரில் உள்ள அங்காளம்மன் – பாவாடைராயன் கோவிலை, நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத்திற்காக இடிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இக்கோவில், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குலக்கோயிலாகத் திகழ்வதைக் குறிப்பிட்டுள்ளார்.
கோவில் இடிக்கப்பட்டால் இலட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கை பாதிக்கப்படும் என்பதால், கோவிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி நிறுவனம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் என்.எல்.சிக்குத் தமிழக அரசும் போதிய அழுத்தம் கொடுத்து இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



