இந்தியா கூட்டணி நடைபெறும் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை!

Advertisements

டெல்லியில் இன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெறவிருந்த ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டத்தைச் சுற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க சுமார் 23 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், தமிழகத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் எனக் கூறி, தி.மு.க. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

கூட்டம் நடைபெறவுள்ள டெல்லியின் பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் ராகுல் காந்தியையும் விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் களத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த போஸ்டர்களில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சரத் பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட கூட்டணி தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்களில் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் தி.மு.க.வின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் முதுகில் அமர்ந்து சவாரி செய்து முன்னேறியது, இப்போது எங்களையே முதுகில் குத்திவிட்டது” என்று பொருள்படும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், “தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சண்டையிட்டுக் கொள்பவர்கள், எப்படி இந்தியாவை முன்னேற்றுவார்கள்?” என்ற கேள்வியும் அதில் எழுப்பப்பட்டுள்ளது.

இவை தவிர, முந்தைய காலங்களில் ராகுல் காந்தியை சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் விமர்சித்துப் பேசிய கருத்துக்களும் ஹிந்தியில் போஸ்டர்களாக அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன. கூட்டணிக்கு எதிரான இந்த அதிரடி போஸ்டர்கள், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *