
விழியே கதை எழுது…விழியில் விழுந்து இதயம் நுழைந்தது.போன்ற திரைப்படப் பாடல்கள்…விழியைப் பற்றிப் பாடி நம் அனைவரது மனதையும் கவர்ந்தது…..
நம்ம உடலில் முக்கியமான உறுப்புக் கண் என்பது அனைவருக்கும் தெரியும். கண்போலக் காப்பேன், கண்ணும் கருத்துமாக, போன்ற சொற்களை நாம் வழக்கில் பேசுவதுண்டு. உடலின் எந்த ஒரு பாகத்தில் குறை இருந்தாலும் மற்றவர் துணை இல்லாமல் செய்து கொள்ள முடியும். ஆனால் கண்ணுக்குப் பாதிப்போ, பார்வை குறைபாடு இருப்பின் மிகவும் கஷ்டம். பார்வை சரிவரத் தெரிய வேண்டுமானால் கண் மிகவும் கவனமாகப் பராமரிக்கப் பட வேண்டும்.
வெயில் காலங்களில் நம் கண்களுக்கு அலர்ஜி ஏற்படுவதுண்டு. அதே போல மழைக் காலங்களில் கண்கள் சிவந்து, வீங்கி ஒரு வித எரிச்சல் ஏற்படும். துணியில் மஞ்சள் நனைத்து ஒற்றிக் கொள்வர். இது ஒரு தொற்று நோய். மிக விரைவில் ஒருவரிடமிருந்து தீப்போலப் பரவக்கூடியது.நோய்த்தொற்றுக்கு ஆளானவரின் செல்போன் முதல் கொண்டு அவர் பயன்படுத்தும் பொருட்கள்மூலம் மற்றவர்களுக்குப் பரவும்.

ஒவ்வொன்றுக்கு ஒரு ஊரின் பெயரை அடை மொழியாச் சொல்லுவோம். மல்லிக்கு மதுரை, தஞ்சாவூர் பொம்மை, திருநெல்வேலி அல்வா. ஆனால் ஒரு நோய்க்கு ஊர் பெயர் வைத்திருக்கிறாகள். அதுவும் நம்ம மெட்ராஸ் பெயர்… கண் அழற்சி காரணமாக உண்டாகும் நோய்த் தொற்றுக்கு தான் இந்தப் பெயர்… மெட்ராஸ் ஐ
1918-ம் வருடம் மெட்ராசில் ஒரு வகை கண் நோய் கண்டறியப்ப்ட்டது. அந்நோய்க்கான காரணம் பற்றியும், அதைக் குணமாக்குவதற்கான வழி முறைகளையும் குறித்த ஆராய்ச்சி அச்சமயம் நடைபெற்றது. `அடினோவைரஸ்’ எனும் நுண்ணுயிரியினால் தான் அந்நோய் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இந்த ஆராய்ச்சி மெட்ராசில் எழும்பூர் மருத்துவமனையில் ஆராய்ச்சி செய்யப்பட்டதால் இவ்வகையான கண் நோய் `மெட்ராஸ் ஐ” என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளால் இந்த நோய் ஏற்படுகிறது. விழியின் வெண்படலத்தில் ஏற்படும் ஒரு வித அழற்சி தான் காரணம். கன்ஜூக்டிவிடிஸ் என்பதும் ஒரு வித கண் நோய் தான்.
வாசனைப்பொருள்கள், வேதிப்பொருள்கள் மூலமாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வாமை, அலர்ஜி போன்றவையே காரணம். ஆட்டோ இம்யூன் குறைபாட்டினாலும் இது ஏற்பட வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவிகிதம் பேருக்கு 4 அல்லது 5 நாட்களில் சிகிச்சை இல்லாமலே குணமடைந்து விடுவதாகவும், சிலருக்கு மாதக் கணக்கில் கூடக் குணமாவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதாவது அவரவர் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கேற்றவாரே நோய் குணமடைவதில் காலதாமதம் அமைகிறது.
சரி, இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் எந்த மாதிரியான சிகிச்சை பெறலாம் என்பதனைக் காணலாம். முதலாவதாகக் கண் அரிப்பு உணர்வு இருப்பவர்கள் கண்களைத் தேய்த்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தாமாகவே மருந்து கடைகளில் ஆயின்மெண்ட், டூயூப், கண் மருந்து எனக் கண்ட மருந்துகளையும் வாங்கி உபயோகிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
கண்களைத் தூய்மையான பருத்தி நூலால் ஆன துணிகளைப் பயன்படுத்தி ஒற்றிக்கொள்ள வேண்டும். தற்போது டில்லியில் மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவி வருவதாகச் செய்திகள் வருவதால், நாமும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமானது.
பொது நலம் கருதி மக்களுக்காக ஜெம் தொலைக்காட்சி… கண் காப்போம்… விதிகளைப் பின்பற்றுவோம்….

