
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரம் என்கிற பட்டத்தைத் தொடர்ந்து எட்டாவது முறையாகப் பெற்றுள்ளது. இந்த விருதைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மை நகரங்கள் விருது வழங்கப்படுகிறது. தில்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் மனோகர்லால் கட்டோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது தொடர்ந்து இந்தியாவின் தூய்மையான நகரத்துக்கான விருதை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரத்துக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிச் சிறப்பித்தார். இந்தூர் நகரம் தொடர்ந்து எட்டாவது முறையாக இந்த விருதைப் பெறுவது குறிப்பிடத் தக்கது.
குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது பரிசையும், மகாராஷ்டிரத்தின் நவி மும்பை மூன்றாவது பரிசையும் பெற்றன. அதற்கான பாராட்டுச் சான்றிதழ்களையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிச் சிறப்பித்தார்.



