நாடு முழுவதும் உள்ள நகரங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம்.!

Advertisements

தீபாவளித் திருநாளையொட்டி நாடு முழுவதும் உள்ள நகரங்களில் கோவில்கள், வீடுகள் கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வாண வேடிக்கையும் வண்ண விளக்கொளிக் காட்சிகளும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

தீபாவளியையொட்டி நாட்டின் அனைத்து நகரங்களிலும் நேற்றிரவே கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. தமிழ்நாட்டின் சிவகங்கையில் கட்டடங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்தன.

கோயம்புத்தூரில் நேற்றிரவே தீபாவளிக் கொண்டாட்டம் களை கட்டியது. பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன் இரவில் ஒளிரும் வெடிகளையும், வாண வெடிகளையும் கொளுத்தி மகிழ்ந்தனர்.

மதுரையில் ஒருவீட்டின் மாடியில் குடும்பத்துடன் அனைவரும் மத்தாப்புக் கொளுத்தித் தீபாவளியைக்கொண்டாடினர்.
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோவில் தீபாவளியையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பொன்மலைபோல் ஒளிர்ந்தது. திருச்சியில் உள்ள கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கடைகளில் வெடிகள் வண்ண விளக்குகள் விற்பனை களைகட்டியது. தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்குக் கடைத்தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஆண்டில் பல்வேறு புதுமையான அழகான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் தீபாவளியையொட்டி நடைபெற்ற வாண வேடிக்கையும், வண்ண விளக்கொளிக் காட்சியும் கண்ணுக்கு விருந்தளிப்பதாக அமைந்தன.

மகாராஷ்டிரத்தின் துலேயில் உள்ள சுவாமிநாராயணர் கோவில் தீபாவளியையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நிகழ்ந்த வண்ண ஒளிக்காட்சியும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

தீபாவளியையொட்டி இராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள கட்டடங்களும், தெருக்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சியளித்தன.

திரிபுராவின் அகர்தலாவில் தீபாவளியையொட்டிக் காளிப் பூசைப் பந்தலை முதலமைச்சர் மாணிக் சகா திறந்து வைத்தார். இந்த விழாவில் ஆடல் பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தீபாவளியையொட்டி ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள ஆளுநர் மாளிகை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் செய்துள்ள வண்ண விளக்கொளிக் காட்சியும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் உள்ளது.

தில்லி நகரின் கடைத்தெருக்களிலும் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குத் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *