திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்த வாலிபரைச் சிறுமியின் அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மகன் முரளி (வயது 22). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தும்பேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை முரளி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாகப் பெண்ணின் பெற்றோர் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டு முரளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் முரளி அந்தச் சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து பலமுறை பெண்ணின் அண்ணன் சந்தோஷ் கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து சிறுமியிடம் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் சந்தோஷ் முரளியை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் சரிந்து விழுந்த முரளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பலூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சந்தோஷை தேடி வருகின்றனர்.