Lok Sabha Elections 2024: ‘பம்பரம்’ சின்னம் ஒதுக்க மறுப்பு!

Advertisements

சென்னை: லோக்சபா தேர்தலில், மதிமுக., வுக்கு ‘பம்பரம்’ சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிற்பகலில் நடைபெறும் வழக்கு விசாரணையின்போது முறையிடுவோம் எனத் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சிக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியிருந்தார். இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினர்.

பம்பரம் சின்னம் பொதுவான சின்னங்கள் பட்டியலில் உள்ளதா எனக் கோர்ட் கேள்வி எழுப்பியது. அப்போது பம்பரம் சின்னம் பொதுச்சின்னமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும், ம.தி.மு.க., விண்ணப்பத்தின் மீது இன்று (மார்ச் 27) காலை முடிவெடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதிமுக., வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் நடக்க இருக்கிறது. அப்போது சின்னம் கேட்டு முறையிடுவோம் எனத் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ உறுதி

இதற்கிடையே நாம் தமிழர் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ‘மைக்’ சின்னத்திற்கு பதிலாகப் படகு, பாய்மர படகு உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு கோரப்பட்டது. இதனை நிராகரித்த தேர்தல் ஆணையம், ‘மைக்’ சின்னத்திலேயே போட்டியிடுமாறு அறிவுறுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *