
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மக்களுக்குத் தரமான மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் கிடைக்கத் தமது அரசு பாடுபட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக அரசு பன்னிரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நலவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது பெருமிதம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் என்னும் அந்தத் திட்டம் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உயர்தரத்திலான மருத்துவ வசதிகளை அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மருந்தகம் மூலம் உயிர் காக்கும் மருந்துகளை மிகவும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அதிகக் கல்லூரிகள் திறந்தும், மாணவர் பயிலும் இடங்களை அதிகரித்தும் ஏழை மாணவர்களும் மருத்துவப் படிப்பு படிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நலமான இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.



