
மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் பெண்களுக்கான இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதன் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. இதில், அதிகப்பட்சமாக லிட்ச்ஃபீல்ட் 50 ரன்களையும், எலிஸ் பெர்ரி 36 ரன்களையும் குவித்தனர். பந்து வீச்சு தரப்பில் அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ ம்லாபா, நாடின் டி கிளர்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
இதன் பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைச் சந்தித்தது. பந்து வீச்சு தரப்பில் ஜார்ஜியா வேர்ஹாம் மூன்று விக்கெட்களையும் அலானா கிங், சோஃபி மோலினக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர்..


