2036-க்குள் ரூ. 1.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம்: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு.!

2036ஆம் ஆண்டுக்குள் ஒன்றரை இலட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை முதலமைச்சர் நிர்ணயம் செய்துள்ளதாகத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 514 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஒரு இலட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசியபோது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் முதலீட்டுக்கான நம்பகமான மாநிலமாக முதல் இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஒரு இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2036ஆம் ஆண்டுக்குள் ஒன்றரை இலட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை முதலமைச்சர் நிர்ணயம் செய்துள்ளதாகவும், வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்பதே இலக்கு என்றும் தெரிவித்தார். மேலும், இன்றைய முதலீடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தங்களுடைய பாதையைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *