
வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் சென்ற மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றார். பட்ஜெட் உரையை ஜனாதிபதியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.புதிய நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது.
சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம். ஊழல் ஒழிப்பையும் வாரிசு அரசியலையும் எதிர்த்து பணியாற்றி வருகிறோம்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. எங்கள் அரசு யாரையும் ஒதுக்காத அனைவரையும் அரவணைக்கும் அரசாக செயல்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது என்று கூறினார். மேலும் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.
நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடிக்கும் அதிகரித்துள்ளது. வரி செலுத்துவோருக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும். இறக்குமதி வரிகள் உட்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களுக்க ஏற்கனவே உள்ள விகிதங்களே தொடரும்.” என்று தெரிவித்தார்.


