
தங்கத்தை விட கலைமாமணி விருதிற்கு மதிப்பு அதிகம் என்று, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற, இயல், இசை, நாடகக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த, கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம்பிரபு, மணிகண்டன், நடிகை சாய்பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர்-சுப்பராயன், பாடகி ஸ்வேதா-மோகன், பாடலாசிரியர் விவேகா, அனிருத் உள்ளிட்டோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும், கலைமாமணி விருது வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது தலைசிறந்த காலைஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பு பெற்றமைக்கு, மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து கலைமாமணி விருது வழங்கியதில் எனக்கும் பெருமை என்றும், கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும், நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூபாய் 3-ஆயிரம் உதவித் தொகை வழங்கி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில், 2 முறை ஏறுகிறது தங்கத்தின் விலை என்றும், தங்கப் பதக்கத்தை விட கலைமாமணி என புகழ் சேர்க்கும் பட்டத்திற்குதான் மதிப்பு அதிகம் என்றும், ஏனென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



