
புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் வடக்கு மாவட்ட செயலாளர் கே.கேச்செல்லப்பாண்டியன் சட்ட மன்ற உறுப்பினர் வை.முத்துராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 250 காளையர்களும் பங்கேற்றுள்ள நிலையில் வாடிவாசலிலிருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளைத் தீரத்துடன் காளையர்கள் தழுவி வருகின்றனர்
தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடி வாசலைக் கொண்ட மாவட்டமாகவும் எண்ணற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதைப் பறைசாற்றும் விதத்தில் இந்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு கடந்த எட்டாம் தேதி தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அங்கு உள்ள பிடாரி அம்மன் கோயில் திடலில் ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.15 மணிக்குத் தொடங்கியது.
இந்தப் போட்டியைத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கே.கேச்செல்லபாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் கொடிய அசைத்துத் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகப் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் தமிழ்நாடின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 காளைகளும் 250 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். வீரர்கள் சுழற்சி முறையில் களம் இறக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இதில் ஜல்லிக்கட்டு காளைகள் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் காளையர்களும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறி பாய்ந்து வரக்கூடிய நிலையில் அதனைக் காளையர்கள் தீரத்துடன் தழுவி வருகின்றனர். மேலும் இதில் சிறந்த முறையில் காளைகளைத் தழுவும் வீரர்களுக்கும் வீரர்களின் பிடியில் சிக்காமல் செல்லும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் வெள்ளிக்காசு பரிசாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் நகர செயலாளர் செந்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் எனக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 250 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதார துறையினர் வருவாய் துறையினர், கால்நடைபராமரிப்புத் துறையினர், தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

