உயர்கல்வியை திமுக அரசு சீரழித்து வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 9000&க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளுமே கவுரவ விரிவுரையாளர்களை நம்பியிருக்கும் பட்சத்தில், மாணவர்களுக்கு தரமான கல்வி எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். ஆயிரக்கணக்கான உதவிப் பேராசிரியர்கள் ஓய்வு பெற்ற நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி விட்டதாக தெரிவித்தார்.
இருப்பினும் புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு முன்வரவில்லை என கூறினார். ஆசிரியர்களை நியமிக்கும் கடமையைக் கூட செய்யத் தவறிய திமுக அரசு, உயர்கல்வியை சீரழித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
