
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்டு மாதம் 31-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுழற்சி முறையில் நடைபெறும் இந்த போட்டி தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லை பிரச்சினை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் சென்று இந்திய அணி விளையாட மறுத்துள்ளதால், ஆசிய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஸகா அஷ்ரப்புடன் கலந்து ஆலோசித்து, 4 லீக் போட்டிகளை தவிர்த்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி உட்பட மற்ற 9 போட்டிகளையும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ பொருளாளரும், ஐபிஎல் போட்டிகளில் தலைவருமான அருண் துமால், இந்திய அணி, பாகிஸ்தான் சென்று விளையாடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதோடு, போட்டிக்கான அட்டவணையும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உலக கோப்பை போட்டித் தொடர் நடைபெற உள்ளதால், அதற்கு ஏதுவாக ஆசிய கோப்பை தொடர் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளாக நடத்தப்பட உள்ளது
