கோடை காலத்தில் வெயிலால் பயணிகள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என, பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே, சாதாரண மின்சார ரெயிலுக்கு பதிலாக, முழுவதுமாக ஏ.சி. பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்களை தயாரித்து பயன்படுத்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏ.சி. மின்சார ரெயில், தயாரிப்பு பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் இன்று முதல் இயக்கப்பட்டது. அதன்படி முதல் ரெயில் சேவை இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கியது. இந்த ரெயில், துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் என்றும், மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.
