
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரைச் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்தத் தொடரில் புனேயில் நடந்த நான்காவது டி20 போட்டியில் சிவம் துபேக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்று வீரராகச் சேர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பேட்டிங்கின்போது அதிரடியாக ஆடிய துபேக்கு கடைசி ஓவரில் ஹெல்மட்டில் பந்து தாக்கியது.
இதனால் ஹர்ஷித் ராணா மாற்று வீரராகப் பீல்டிங்கின்போது இடம்பெற்றார். அவர் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
துபேயை விட அதி வேகத்தில் பந்து வீசக்கூடிய ராணா மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டது சர்ச்சையானது.
இங்கிலாந்து கேப்டன் பட்லர் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்தார். இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறினார்.
மேலும் தன்னிடம் இது தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை என்றார்.
மாற்று வீரர் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “இந்தியா 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான்காவது போட்டியின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டு இருக்கும்.
நான்காவது போட்டியில் இந்திய அணி 12 வீரர்களுடன் விளையாடியது. இங்கிலாந்து அணி இது மாதிரித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 4 வீரர்களைப் பேட்டிங்கில் மாற்று வீரராகப் பயன்படுத்த இந்தியா அனுமதிக்குமா?” என்று தெரிவித்தார்.
