ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இந்நிலையில், போட்டியின் முதல் நாளிலேயே இந்தியா தனது பதக்கக் கணக்கை தொடங்கியுள்ளது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர் மற்றும் விதார்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

இதனிடையே, மகளிருக்கான டிரடிஷனல் 60 கிலோ எம்.எம்.ஏ. பிரிவிலும் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. காலிறுதிப் போட்டியில் மங்கோலியாவின் அல்டன்சிமேக் பைகல்மாவை வீழ்த்திய இந்திய வீராங்கனை சுச்சிகா தரியால், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் அந்தப் பிரிவில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்கத்திலேயே இந்தியா பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் மேலும் பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *