
வேளாங்கண்ணியில் காதலித்து குடும்பம் நடத்தி ஏமாற்றியதால் தீக்குளித்த 16 வயதான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பண்டகசாலை தெருவைச் சேர்ந்த ஜஹாங்கிர் – ஜெனிபர் சோபியா தம்பதியினரின் மகள் தாரணி. திருச்சியை சேர்ந்த இவர்கள் வேளாங்கண்ணியில் தங்கி துணி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களின் மகள் தாரணி வேதாரண்யம் குருகுலத்தில் 10 ஆம் வகுப்பு படித்துப் பொதுத்தேர்வு எழுதிய நிலையில் குடும்ப வறுமை காரணமாக வேளாங்கண்ணியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்துள்ளார்.பணி முடிந்து தினமும் செருதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமாரின் ஆட்டோவில் வீட்டிற்கு வந்த தாரணிக்கு அவரோடு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தனக்கு திருமணமானதை மறைத்து ஆசை வார்த்தைகளைக் கூறி ராஜேஷ்குமார் தாரணியுடன் பழகி அவரைக் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் தாரணியின் வீட்டிற்கு தெரிய வர இருவரும் வெளியூர் செல்லத் திட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ராஜேஷ்குமார் மற்றும் தாரணி ஆகியோர் வீட்டிற்கு தெரியாமல் திருப்பூருக்கு சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் தாரணியின் தந்தை ஜஹாங்கிர் இதுகுறித்து ராஜேஷ்குமார் மீது வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் தொடர்ச்சியாகப் புகார் அளித்து வந்துள்ளார். ஆனால், வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண்காவலர் இளங்கேஸ்வரி ராஜேஷ்குமாரின் சொந்த ஊரான செருதூர் என்பதால் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தொடர்ச்சியாக அலட்சியம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. மகள் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தேடிக்கொண்டு இருந்த நிலையில், கடந்த மாதம் 11 ஆம் தேதி தாரணியின் தாய் ஜெனிபர் சோபியாவுக்கு போன் செய்த ராஜேஷ்குமார் உங்கள் மகள் தீயில் எரிந்து கொண்டு இருக்கிறாள் என்றும் சிலிண்டர் வெடித்து விட்டதாகவும் நாகை அரசு மருத்துவமனைக்கு வருமாறும் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட தாரணியின் பெற்றோர் அலறியடித்து நாகை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது தாரணி உடல் முழுவதும் எரிந்து மிக மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்துள்ளார். அங்கு என் மகளை என்ன செய்தாய்? எனப் பெற்றோர் ராஜேஷ்குமாரிடம் கதறி அழுதுள்ளனர். ஆனால் ராஜேஷ்குமார் அலட்சியமாக இருந்ததுடன் பெற்றோர்களிடம் தாரணியை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் தாரணியிடம் நடந்த உண்மையைக் கூறுமாறு கேட்டபோது ராஜேஷ்குமார் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவனால் தான் நான் தீயில் கொளுத்திகொண்டேன் என்றும் கண்ணீர்மல்க கூறியுள்ளார். அதனை வீடியோவாக எடுத்த பெற்றோர்கள் ராஜேஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாகை எஸ்பி ஹர்ஷ் சிங்-கை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகை எஸ்பி போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஒரு வாரக் காலத்திற்கு பிறகு ராஜேஷ்குமார் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆனால், 21 நாட்களாக முறையிட்டும் எந்தவித நடவடியும் எடுக்காமல் வேளாங்கண்ணி போலீசார் அலைக்கழித்து வந்துள்ளனர். இதற்குக் காரணம் குற்றவாளி தன்னுடைய சொந்த கிராமம் என்பதால் வேளாங்கண்ணி பெண் காவலர் இளங்கேஸ்வரி அலைக்கழித்து அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர். போக்சோ வழக்குப்பதிவு செய்ய நாகை எஸ்பி ஒரு வாரக் காலத்திற்கு முன்பே அறிவுறுத்தியும் வேளாங்கண்ணி போலீசார் அலட்சியம் காட்டியதாகவும், குற்றவாளியை விரைந்து கைது செய்து என் மகளுக்குரிய நீதி கிடைக்க வேண்டுமென்றும் கண்ணீர் மல்கக் கூறினர்.மேலும் தாரணியின் பெற்றோர்.
85 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ள தாரணி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் கூறி வந்தனர்.மேலும் சிறுமியின் உயிருக்கு 48 மணி நேரம் மருத்துவர் கெடு விடுத்திருந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

