பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், கம்யூனிஸ்டு கட்சிகளும் புதிய தலைமைச் செயலகம் திட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அப்போது, புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் குறித்து அவர் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:
“தலைமைச் செயலகம், செக்ரடரியேட் என இந்த விவகாரத்தை எல்லோரும் அரசியலாக்குகிறார்கள். நாம் அதை செய்துவிடுவோம், இதை செய்துவிடுவோம் என்று பலரும் பேசுகிறார்கள். பொதுவாக ஒரு திட்டம் அறிவிக்கப்படும்போது, அதற்கான இடம் குறித்து விரிவான திட்ட அறிக்கை (DPR) பெறுவது வழக்கம். அதன் பிறகுதான் அந்த திட்டத்திற்கான இடம் தேர்வு செய்யப்படும். அந்த அறிக்கை வந்த பிறகுதான், அந்த இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்டலாமா, வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்.
எனவே, மீனவ சகோதரர்களே, சகோதரிகளே, தலைமைச் செயலகம் விஷயத்தில் முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமைச் செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா? என்று கேட்டால், கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் எங்கள் முதலமைச்சர் நிற்பார். இன்னொன்றையும் சொல்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் திமுக, அதிமுக என்று பார்ப்பது கிடையாது. எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறார்.
சட்டசபையில் திமுகவினர் அன்றைக்கு திடீரென சபாநாயகர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அந்த தர்ணாவில் ஈடுபட்ட ஒரு திமுக எம்.எல்.ஏ.வால் தரையில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. அவர் பாவம் என்று முதலமைச்சர் விஜய் கை கொடுத்து தூக்கிவிட்டார். நமது முதலமைச்சரை எதிர்த்து திமுக போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்திலும், நம்முடைய முதலமைச்சர் அவருக்கு கை கொடுத்து தூக்கிவிடுகிறார். இதுதான் எங்கள் அண்ணன். இவ்வளவுதான் எங்கள் அரசியல். பழிவாங்கும் அரசியல் எங்களுக்கு இல்லை.
கம்யூனிஸ்டுகள் நம்மைப் பற்றி பேசுவது வருத்தமாக உள்ளது. திமுக ஆட்சி நடந்தபோது திமுகவினர் கமிஷன் வாங்கினார்களா? இல்லையா? என்பதை கம்யூனிஸ்டு கட்சியினர் மனசாட்சியோடு சொல்ல வேண்டும்.” இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.



