Income Tax Department: பாஜகவுக்கு ரூ. 4,600 கோடி அபராதம் வருமான வரித்துறை நோட்டீஸ்… காங்கிரஸ் பதிலடி!

Advertisements

காங்கிரஸ் கட்சி வருமான வரி மற்றும் அபராதமாக ரூ.1700 கோடி செலுத்தும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதற்கு பதிலடியாக, பாஜகவுக்கும்  இதே அடிப்படையில் ரூ.4,600 கோடி செலுத்தும் படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி‌: 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.1,700 கோடி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரி பயங்கரவாதம்

இந்த ஆண்டுகளுக்கான வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்தத் தொகையை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் வருமான வரித்துறையின் புதிய நோட்டீஸ் கிடைத்ததாக இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் அஜய் மக்கன் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் இருவரும் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “பாஜக வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

அஜய் மக்கன் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. சீதாராம் கேஸரி காங்கிரஸ் தலைவராக இருந்த 1993-94ல் ஆண்டுகளில் மட்டும் ரூ.53 கோடி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை விதிமீறல்களுக்கு விதிக்கும் அபராதத்தின் அடிப்படையில் பார்த்தால் பாஜக ரூ.4,600 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அடுத்த வாரத் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடும்.

ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும்  மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகக் காங்கிரஸ் நிதி ரீதியாகச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக வருமான வரித்துறையை பயன்படுத்தி வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

ஏற்கெனவே, வருமான வரித் துறையால் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் ஏற்கனவே நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *