Arvind Kejriwal Arrest: கெஜ்ரிவால் கைதுக்குக் கண்டனம்: நாளை டெல்லியில் பிரம்மாண்ட பேரணி; வீடு வீடாகச் சென்று அழைப்பு!

Advertisements

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அதற்குக் கண்டனம் தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாளைப் பிரமாண்ட பேரணி டெல்லியில் நடைபெறுகிறது.

இந்தப் பேரணியில் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் வீடு வீடாகச் சென்று அடைப்பு விடுத்து வருகிறார்கள்.

அப்போது பல்வேறு இடங்களில் அவர்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய், ரெகர்புரா மற்றும் கரோல் பாக் பகுதியில் வீடு வீடாகச் சென்று நாளை ராம்லீலா மைதானத்தில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொள்ளும்படி வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோபால் ராய், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மத்திய பாஜக அரசுக் கைது செய்த நாள் முதல் மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை தன்னால் பார்க்க முடிந்தது என்று தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்தப் பேரணியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சோம்நாத் பார்தி டெல்லி காண்ட் பகுதியில் மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தபோது தன்னையும் மற்றொரு எம் எல் ஏ வீரேந்திர கார்டியனையும் போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

144 தடை உத்தரவு அமலில் இருப்பதை காரணம் காட்டி போலீசார் தங்களை தடுத்ததாகவும் ஆனால் உத்தரவுபற்றி எந்த ஆவணங்களையும் போலீசார் தங்களுக்கு காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார். “ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களைச் சிறையில் அடைக்கவும் பின்னர் கட்சி வேட்பாளர்களைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் தடுக்கவும் பாஜக திட்டமிட்டு வருகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் இருந்து நாளைய பேரணியில் அனைத்து கட்சி தொண்டர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பக்கத்து மாநிலமான பஞ்சாபிலிருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *