
காசாவில் ஆயிரக்கணக்கான கட்டடங்களை இஸ்ரேல் அரசு குண்டுவைத்து நொறுக்கித் தரைமட்டமாக்கி வருகிறது.
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இஸ்ரேல் அரசு திட்டமிட்டுத் தனது குடிமக்களான யூதர்களைக் குடியேற்றி வருகிறது. அவர்களுக்கு இடையூறாக இருக்கும் காசா மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றி வருகிறது.
இவ்வாறு காசாவில் இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு இலக்கான ஆயிரக்கணக்கான கட்டடங்கள் மக்கள் வாழத் தகுதியற்றவையாக உள்ளன. அவற்றில் இருந்த மக்கள் பாதுகாப்பான வேறிடங்களுக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில் சேதமடைந்த அந்தக் கட்டடங்களுக்குக் குண்டுவைத்து அவற்றைத் தகர்த்து வருகிறது இஸ்ரேல் அரசு.
குண்டுவெடித்ததால் பலத்த சத்தம் ஏற்படுவதுடன் அப்பகுதியே கட்டட இடிபாடுகளின் தூசி நிறைந்ததாகக் காணப்படுகிறது.
போரில் வெல்லும் நாடு தோற்றுப்போன நாட்டின் உட்கட்டமைப்புகளைச் சிதைத்து அழிப்பது ஒரு கொடிய போர்க்குற்றமாகும்.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேலிய அரசு ஆயிரக்கணக்கான கட்டடங்களைக் குண்டுவைத்துத் தகர்த்துத் தட்டி நொறுக்கித் தரைமட்டமாக்கி வருவது அத்தகைய போர்க்குற்றத்தில் அடங்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



