
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து ரூ 67,00,000 இழந்த கூகுள்ஊழியர்…
நாம் அனைவரும் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவு சேமித்து வைத்தல் அவசியம். அது நமது ஆபத்துக் காலத்தில், அவசரத் தேவைக்கு உதவும், நிலம், தங்கம், இவ்ற்றில் முதலீடு செய்த காலம் போய், கிரிப்டோ கரன்சி, பிட் காயின் போன்றவற்றில் முதலீடு செய்வது அதிகரித்து விட்டது. அப்படியாக க்ரிப்டோகரன்சியில் முதலீடு செய்து பணத்தை முழுமையாகப் பெறுகிறார்களா?.. பார்ப்போம்
இந்த மாத தொடக்கத்தில் 22 வயதான கூகுள் ஊழியர் ஒருவர் தான் 35 வயது அடையும்பொழுது 41 கோடி ரூபாய் சேமிப்புடன் ஓய்வடைய இருப்பதாகத் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். CNBC உடனான நேர்காணலில் அவர் தனது திட்டங்கள்குறித்து வெளிப்படுத்தி இருந்தார். அதே நேர்காணலில், அவர் செய்த மிகப்பெரிய பொருளாதார தவறு பற்றியும் தெரிவித்திருந்தார். அதில் அவர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து, எப்படி 67 லட்சம் ரூபாய் இழந்தார் என்பது பற்றிக் கூறியிருந்தார்.
தெரியாதவர்களுக்கு இந்த இளைஞரின் பெயர் ஈதன் நுகுவான்லி. இவர் கூகுள் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது சம்பளம் ஒரு வருடத்திற்கு 1.60 கோடி ரூபாய். நுகுவான்லி சிறு வயதிலிருந்தே முதலீடு செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார். இவரது பெற்றோர்களே இவருக்கு ஆசானாக இருந்து வந்துள்ளனர்.
முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும், தேவையற்ற செலவுகள் செய்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் ஒரு டீனேஜராக இருக்கும் பொழுதே அவர் உணர்ந்துள்ளார். நவம்பர் 2021 மற்றும் ஜூன் 2022-ல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து தோராயமாக 67 இலட்சம் ரூபாய்) இழந்துள்ளார். இதுவே இவர் தனது வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய பொருளாதார தவறு என்று கூறுகிறார்.
இவர் தனது பெரும்பான்மையான முதலீடுகளை bitcoin மற்றும் ethereum ஆகிய இரண்டிலும் செய்துள்ளார். இதனுடன் ஒரு சில நூறு டாலர்களை பிற கிரிப்டோ கரன்சிகளான shiba inu மற்றும் dogecoin இல் செய்துள்ளார். பிட்காயின் விலை அதிகரித்ததால் மேலும் 15,000 அமெரிக்க டாலர்களை கடன் வாங்கி அதில் மீண்டும் முதலீடு செய்துள்ளார். 2022-ம் ஆண்டு கோடை காலம் முதல் பிட்காயின் விலைகள் சரியத் தொடங்கியதை நாம் அனைவரும் அறிவோம். எனவே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கிரிப்டோ சந்தை தலைகீழானதால் நுகுவான்லி பெரிய இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.
நம்பி மோசம் போனவர்களின் கதைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆசை யாரை விட்டது. விழிப்புடன் செயல்பட்டு நம் உழைப்பை நாம் உறுதிபடுத்தி, பாதுகாத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.


