
உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, 1916 ஆம் ஆண்டு மே 5, ஆம் தேதி பிறந்தார். தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.
முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே. படம் பெரும் வெற்றி பெற்றது.
ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.
இப்படி திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சின்னப்பா 1951 செப்டம்பர் 23, அன்று இரவு தனது 35ஆவது வயதில் புதுக்கோட்டையில் காலமானார்.அவரது நினைவுத் தினம் இன்று.


