
பாலஸ்தீனத்தில் நடக்கும் பச்சைப் படுகொலைகளை, உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஏராளமான பத்திரிகையாளர்களை, போர் என்ற போர்வையில் கொன்று குவிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது இஸ்ரேல். அப்படி, பாலஸ்தீன ஊடகம் ஒன்றுக்குச் செய்தி வழங்கிக்கொண்டிருந்த 11 வயது சிறுமியையும் இப்போது கொலைசெய்திருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேலுக்கும், காசாவிலுள்ள ஹமாஸ் படைக்கும் போர் தொடங்கியது முதலே அங்கு நடக்கும் அவலங்களை உலகுக்குத் தெரியப்படுத்திய 230-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களைக் கொன்றிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்கள் உலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டே செய்யப்பட்ட படுகொலைகள் இவை என்கிறார்கள் உலகின் முன்னணிப் பத்திரிகையாளர்கள்.
பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படவே, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் தாமாகவே முன்வந்து இஸ்ரேல் ராணுவத்தின் கொடூரங்கள் குறித்துக் காணொளியாகப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதியத் தொடங்கினர். சிலரது பதிவுகளைக் கண்ட ஊடகங்கள் சில, அவர்களைச் இன்டிபென்ட் பத்திரிகையாளர்களாகத் தங்களது ஊடகங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டன. அப்படி, உயிருக்கு அஞ்சாமல் செய்திகளை வழங்கத் தொடங்கியவர்களில் ஒருவர்தான் லாமா நாசர். பாலஸ்தீனத்தில் வசித்துவந்த 11 வயது சிறுமி.
தன் தாய் சாமாவின் உதவியோடு, ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு, தனது பேச்சுத் திறமையை வளர்த்துக்கொண்டார் லாமா. காசாவின் அவலங்களை வீடியோவாகப் பதிவுசெய்து பாலஸ்தீன் கிரானிக்கல்ஸ் என்ற ஊடகத்துக்கு அவற்றை அனுப்பிவந்தார். களத்திலிருந்து பத்திரிகையாளர்கள் எப்படிச் செய்திகளை வழங்குவார்களோ அதே தொனியில், சற்றும் தொய்வில்லாமல் காணொளியில் பேசுகிறார் லாமா.
தான் மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்தில் வசிக்கும் குழந்தைகள், நண்பர்களையும் தனது காணொளிகளில் பேசவைத்திருக்கிறார் லாமா. அதிலொரு காணொளியின் இறுதியில் லாமாவின் நண்பர்கள், இனப்படுகொலையை நிறுத்துங்கள் என்று ஒருசேர முழங்கி, காசா மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கின்றனர்.
இறுதியாக, பாலஸ்தீன் கிரானிக்கல்சுக்கு லாமா வழங்கிய காணொளியில், காசாவிலுள்ள குழந்தைகள், உலகின் மிகக் கடுமையான, சவால் மிகுந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பேரழிவு நிறைந்த இந்த இடத்தில், சிறு சிறு கனவுகளைச் சுமந்துகொண்டு வாழ முயன்று கொண்டிருக்கின்றனர். உண்ண உணவில்லாததால், பட்டினியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதோடு, தொற்று நோய்களாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, போலியோவால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகின்றனர். காசாவிலுள்ள பள்ளி, பல்கலைக்கழகங்களை இஸ்ரேல் அழித்துவிட்டதால், கல்வி கற்கும் உரிமையைக் குழந்தைகள் இழந்துவிட்டனர். இங்கிருக்கும் பிள்ளைகள், பள்ளிகளுக்குச் சென்று வகுப்பறையில் அமர்வதற்கு பதிலாக, தங்களது தந்தையின் கல்லறைகளுக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டிருக்கின்றனர். அல்லது தண்ணீருக்காக வரிசையில் நின்று வாடிக்கொண்டிருக்கின்றனர். காசாவின் குழந்தைகள், இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் என்றும், உலகிலுள்ள மற்ற குழந்தைகளைப்போல அமைதியாக வாழ வேண்டும் என்றும்தான் விரும்புகின்றனர் என்று தன் மக்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார்.
பாலஸ்தீன் கிரானிக்கல்ஸ்’ ஊடகம், சாமா, லாமாவின் ஆசிரியர் மட்டுமல்ல… அவரின் பெரிய ரசிகையும்கூட. இந்தப் போரெல்லாம் முடிந்த பிறகு, லாமாவை நன்றாகப் படிக்கவைத்து, பெரிய பத்திரிகையாளராக்க வேண்டும் என்பதே சாமாவின் ஆசை. எதிர்காலத்தில் தன் மகளைக் காசாவின் குரலாக்க வேண்டும் என்பதே சாமாவின் கனவு என்கிறது. அந்த கனவை சுக்கு நூறாக்கிக் கொன்றிருக்கிறது இஸ்ரேல் ராணுவத்தின் ஏவுகணை. ஜூலை 15-ம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், குடும்பத்தோடு லாமா கொல்லப்பட்டிருக்கிறார்.
லாமா மறைந்துவிட்டாலும், நிச்சயம் அவரது காணொளிகள் மூலம் இஸ்ரேலின் கொடூரங்கள் உலக அரங்கில் நியாயக் குரலாக என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும். எதிர்காலத்தில், லாமாவை முன்னுதாரணமாகக்கொண்டு பலரும் காசாவின் குரலாக ஒலிக்கக்கூடும்!




