
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் மருத்துவமனையில் இருந்தே அரசு பணிகளைத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து உடல்நலம் பற்றிக் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் உடல்நலம் குறித்த அறிக்கையைப் பிற்பகலில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது அண்ணன் முத்து இறப்பின்போது இறுதிச்சடங்குவரை ஒரு நாள் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நின்றுகொண்டே இருந்ததாகவும், அதன்பின்னர் தொடர்ச்சியாக ஒன்றரைக் கிலோமீட்டர் நடைப் பயணம் மேற்கொண்டதால் அவர் சோர்வடைந்ததாகவும் மா.சுப்பிரமணியன் கூறினார்.



