புதுச்சேரி பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை, புரட்சி மூலம் தகர்த்து, மன்னராட்சியை, முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சி நிறுவப்பட்டது.
இந்த தினம், பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி நேற்று புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு வீரர்கள் நினைவு சின்னத்தில் கலெக்டர் வல்லவன், பிரெஞ்சு துணை துாதர் லீஸ் தால்போ பரே ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்திய, பிரான்ஸ் நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்காலில் ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பிரெஞ்சு மக்கள் இரு நாட்டு கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
போர் நினைவு சின்னத்தில் பிரெஞ்சு துணை துாதர் ஆண்கேல்பாரா மற்றும் பிரெஞ்ச் அலுவலக அதிகாரி ஆண்சிசில் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் எஸ்.பி., மணீஷ், எஸ்.பி., சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.