சென்னை: மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் நேர்மையான நியாயமான அரசியலை கொண்டு வர உறுதி பூண்டுள்ளோம்.
காவிரியில் ஏன் தண்ணீர் வரவில்லை என்பதற்காக தான் முதல் தீர்மானம் இருந்திருக்க வேண்டும். கர்நாடகாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். மேகதாது அணை கட்டியே தீருவோம் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதை பற்றி தீர்மானம் காணவில்லை.
தி.மு.க.,வின் தீர்மானங்கள் பொய்யும், புரட்டுமாக உள்ளது. மத்திய அரசை குறை சொல்வதற்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தின் உரிமை, கண்முன்னே பறிபோய் கொண்டு உள்ளது. அதை பற்றிய தீர்மானத்தை காணோம். இந்த கூட்டத்தொடரில் பா.ஜ., அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எதிர்க்கட்சிகள் சொல்லும் பொய்களுக்கு விடையளிப்பார்கள்.
சிவில் சட்டம் குறித்து பொய் சொல்கின்றனர். ஜிஎஸ்டி வந்த பிறகு அனைத்து மாநிலங்களும் முன்னேறுகிறது. தமிழகம் மட்டும் முன்னேறாததற்கு ஜிஎஸ்டி காரணம் அல்ல. 20 – 30 சதவீத கமிஷன் கேட்டால், தொழில்துறை எப்படி உள்ளே வரும்.
காங்கிரஸ் ஆட்சி பணவீக்கம் 10.5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை சென்றது. உணவு பணவீக்கம் அதிகமாக இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததே காரணம். விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. நீர்பாசன வசதி, பாசன வசதி பெறும் நிலங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. உற்பத்தியாகும் பொருட்கள் குறைந்துள்ளது. இதில் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாய பட்ஜெட் போடுவது முக்கியம் அல்ல. அதன் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாய பொருட்கள் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். இது தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகள்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தக்காளி, வெங்காயம் விலை ஏறும். பிறகு குறையும்.
விலை குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. மானியம் வழங்கி வருகிறது. கூடுதல் மானியம் கொடுத்து தக்காளி, வெங்காயம் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த ஆண்டு டில்லி ஹரியானா, பஞ்சாப், உபி. உததரகண்ட் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக அத்தியாவசிய காய்கறிகளன் விலை ஏறும். இன்னும் சில பிரச்னைகள் வரும். அதனை சமாளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசும் தயாராக இருக்க வேண்டும்.
திமுக.,வில் உள்ளவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. தமிழ் அரைகுறையாக தெரிகிறது. ஹிந்தி ஜீரோ. இதனால், பிரதமர் சொன்னதை அவர்கள் என்ன புரிந்து கொண்டனர். அவர்களிடம் ஹிந்தி, ஆங்கிலம் பேசுபவர்கள் உள்ளனரா? முதல்வர் ஒரு மொழியை மட்டுமே பேசுகிறார். இதனால், பாட்னா சென்றால் சும்மா அமர்ந்துவிட்டு வருகிறார். கர்நாடகாவில் ஆங்கிலம், ஹிந்தியில் பேச முடியாது. பிரதமர் சொன்னது எந்த புரிதலும் இல்லாமல் பேசுகின்றனர். சினிமா ஷூட்டிங் போல் உதயநிதி நடந்து கொள்கிறார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்ற அக்கறை உதயநிதிக்கு இல்லை. உங்களுக்கு என்ன புரிந்தது. பிரதமர் சொன்னது என்ன புரிந்தது.
உங்கள் நிதியமைச்சர், உதயநிதி ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக கூறினார். அதாவது புரிந்ததா? ஆங்கிலத்தில் தான் கூறினார். அதெல்லாம் புரியாது. இதனால் தான் நாங்கள் தமிழில் சப்பைட்டில் போட்டோம்.
முதல்வர், உதயநிதியும், அமைச்சரவையில் ஆங்கிலம், ஹிந்தி பேசுபவர்களை உடன் வைத்து கொள்வோம். அப்படி வைத்து கொண்டால், பிரதமர் என்ன பேசினார் என்பது முழுமையாக தெரியும். அது புரியாமல் பிதற்றி கொண்டு உள்ளனர்.
இவர்கள் பிரதமரோடு துணை நின்று, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பணிசெய்யவிட்டால் செந்தில்பாலாஜி மொரிஷியசில் பதுக்கியிருக்கும் பணத்தை கொண்டு வந்துவிடலாம். பிரதமர் கூறிய பணத்தில் செந்தில்பாலாஜியின் மொரிஷியஸ் பணம் இருக்கும். இதில் முதல்வர் முடிவு எடுக்க வேண்டும். ராஜகண்ணப்பன் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது
. அவர்களது அமைச்சரவையில் எத்தனை பேர் வெளியே பணம் பதுக்கி வைத்துள்ளனர். எத்தனை அமைச்சர் பதுக்கி வைத்துள்ளனர். வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். பிரதமர் கூறிய கறுப்பு பணம் இதுதானே.
இந்தியாவில், கறுப்பு பணம் வெளியே பதுக்கி வைத்துள்ளவர்களில், தமிழக அரசியல்வாதிகள் தான் அதிகம் பேர் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து கறுப்பு பணத்தை கொண்டு வந்தால் அதில் பாதி திமுக., அமைச்சர்களின் கறுப்பு பணம் இருக்கும். இதில் நடவடிக்கை எடுத்தால் நெஞ்சுவலி என சொல்லி மருத்துவமனையில் படுக்க வைத்து கொள்கின்றனர்.
அதில், உதயநிதியின் கறுப்பு பணம் உள்ளது. கறுப்பு பணம் குறித்து உதயநிதி மற்றும் ஸ்டாலினுக்கு பேச தகுதியில்லை. அவர்கள், அதில் சம்பந்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.