bjp vs dmk:மாறும் அரசியல் களம்.! ராகுலுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்.? பாஜக- திமுக நெருக்கத்தின் பின்னனி என்ன.?

Advertisements

கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லாதது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, கலைஞர் நினைவிடத்திற்கு பாஜகவினர் சென்றது கூட்டணி சாத்தியக்கூறுகளை எழுப்பியுள்ளது.

தமிழக அரசியல் மாற்றம்

தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில் ராகுல் காந்தி மற்றும் சோனியாகாந்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது. திமுகவும் காங்கிரசும் பிரிக்க முடியாத நட்பாகப் பல ஆண்டுகள் தொடர்ந்து வருகிறது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் மத்தியில் காங்கிரஸ் அரசால் 3வது முறையாகவும் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை உள்ளது.

அணி மாறுகிறதா திமுக.?

தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்ப்பான நிலையின் காரணமாகப் பட்ஜெட் உட்பட முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதன் காரணமாகத் தமிழகத்தில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. அரசு கஜானாவில் பணம் இல்லாத காரணத்தால் மக்கள்மீது வரிக்கு மேல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான் கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.

படையெடுத்த பாஜக பட்டாளம்

அதே நேரத்தில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். நேற்றைய விழாவைப் பார்க்கும்போது திமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு இரு தரப்பும் நட்பு பாராட்டினார்கள். குறிப்பாக நாணய வெளியீட்டு விழா அரசு விழா என்று வைத்துக்கொண்டாலும் கூடக் கலைஞர் நினைவிடத்திற்கு ராஜ்நாத் சிங், அண்ணாமலை, எல்.முருகன் எனப் பாஜக பட்டாளமே படையெடுத்தது. இது மட்டுமில்லாமல் பிரதமர் மோடி கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.

ஜெயலலிதா நினைவிடம் செல்லாத பாஜக தலைவர்கள்

இது தொடர்பாகப் பத்திரிக்கையாளர் ஆர்.மணி கூறும்போது, நாணயம் வெளியீட்டிற்கு மட்டும் ராஜ்நாத்சிங் வந்தால் அதனைக் கடந்து சென்று விடலாம். ஆனால் நினைவிடத்திற்கும் சென்றுள்ளார். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும்போது ஜெயலலிதா நினைவிடத்திற்கு பாஜக தலைவர்கள் நேரில் சென்றதைப் போல் தெரியவில்லை. பால்தாக்ரே நாணயம் வெளியிடவில்லை. அப்படி இருக்கும்போது கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது அரசியல் முக்கியத்துவம் உள்ளது.

வலை வீசும் மோடி

மத்தியில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை, கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே தான் புதிய கட்சிகளின் ஆதரவை தேடி மோடி வலைவீசத் தொடங்கியுள்ளார். மோடி பொருத்தவரை கடந்த 11 ஆண்டுகளில் எந்தவித அரசியல் லாபம் இல்லாமல் எதுவும் செய்தது இல்லை. நாணயம் வெளியிடும் நிகழ்வு இரண்டு அரசுக்கு இடையிலான உறவு எனக் கூறுவது அபத்தமானது எனத் தெரிவித்தார்.

ராகுலுக்கு ஷாக் கொடுத்தாரா ஸ்டாலின்

இதனிடையே கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என்பது பல்வேறு கேள்விகளை எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகம் நாணயத்தை வெளியிடுகிறது. இது ஒரு அரசு நிகழ்ச்சி. அரசியல் இல்லை. மகிழ்ச்சியோடு கலந்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெறும் இந்த அரசியல் நிகழ்வு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக் கூட்டணி இல்லையெனத் திமுக கூறினாலும், கத்திரிக்காய் முற்றினால் கடைக்குத் தான் வரும். எனவே வெகுவிரைவில் தமிழக அரசியல் களம் மாறும் என்றே அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *