
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர். இந்தியாவின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களில் ஒருவர்.
இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி, ஒடியா, பெங்காலி, உள்ளிட்ட 17 மொழிகளில் தனிப்பாடல்கள் பாடியுள்ளார். திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி, வானொலி எனப் பல்லூடகங்களில் 50 ஆயிரம் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.
மராத்தி, துளு, உருது, குஜராத்தி, பஞ்சாபி, கொங்கணி, அசாமி, சிந்தி, ஆங்கிலம், ஜப்பானிய, அரபு, ஜெர்மன், சிங்களம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார். இருப்பினும் இவரது வாழ்க்கையில் அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் கன்னடத்தில் இடம்பெற்றிருந்தன.
1957ஆம் ஆண்டில் விதியின் விளையாட்டு என்ற தமிழ்த் திரைப்படத்துடன் துவங்கி, இவரது இசை வாழ்க்கை ஆறு தலைமுறைகளைக் கண்டுள்ளது. தென்னிந்தியாவின் “இசையரசி” என்று அழைக்கப்படும் ஜானகி, நான்கு முறை தேசிய விருதுகளையும், 33 முறை மாநில விருதுகளையும் வென்றுள்ளார். மைசூர்ப் பல்கலைக்கழகத்திடமிருந்து முனைவர் பட்டமும், தமிழ்நாடு அரசிடமிருந்து கலைமாமணி விருதும், கர்நாடக அரசிடமிருந்து கர்நாடக ராஜ்யோத்சவா விருதும் பெற்றுள்ளார். 2013ஆம் ஆண்டில், இந்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்துவிட்டார்.
இவ்விருது தனது 55 ஆண்டுக்கால அனுபவத்திற்குத் தாமதமாக வந்துள்ளது ௭னக் கூறிவிட்டார். தென்னிந்திய கலைஞர்களுக்குத் தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். பாரத ரத்னா விருது வழங்கினால் ஏற்பதாகவும், அல்லாவிட்டால் ஏற்க முடியாது என்றும் கூறி மறுத்துவிட்டார்.இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் புகழ்பெற்றவை. 1960, 1970, 1980களில் பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஏசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்களைப் பாடினார்.
இவர் கிட்டத்தட்ட அனைத்து வகைப் பாடல்களிலும் பாடியுள்ளார். 2016ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் மற்றும் மேடைக் கச்சேரிகளில் பாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், திரைப்படத் துறையினர் அன்பிற்கிணங்க இவர் 2018ஆம் ஆண்டில் பண்ணாடி என்ற தமிழ்ப் படத்திற்காக மீண்டும் பாட வந்தார். ஜானகி தெலுங்குப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திரத்தின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளப்பட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதிகளுக்குப் பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார்.
சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற, பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்குத் தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. “எம்எல்ஏ” என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலைக் கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். 1992ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சென்றிருந்தபோது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.
ஜானகி 1959இல் ராம்பிரசாத்தை மணந்தார். அவர் இவரின் இசை வாழ்க்கையை ஊக்குவித்தார். 1997ஆம் ஆண்டில் ராம் பிரசாத் இறந்தார். இவர்களது ஒரே மகன் முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்துள்ளார். முரளிகிருஷ்ணாவின் மனைவி உமா சென்னையிலுள்ள ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடனக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு வர்ஷா மற்றும் அப்சரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் சரளமாக உரையாடவும் எழுதவும் தெரிந்தவர்.
1986இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
2002இல் கேரள மாநிலச் சிறப்பு விருது
நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
1980இல் மலையாளப் படத்துக்கும், 1984இல் தெலுங்குப் படத்துக்கும் தேசிய விருது
பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்துத் தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது ஆகியவற்றைப் பெற்று மக்களின் உள்ளத்தில் என்றும் அழியாக் கீதமாக இடம்பெற்றவர் பாடகி எஸ்.ஜானகி. தன் இனிய குரலால் கோடிக்கணக்கான உள்ளங்களை உறங்கவும் கிறங்கவும் வைத்த இந்த இசைக்குயில் நீடுதுயிலில் ஆழ்ந்து விட்டது.



