
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடிய புகழ்பெற்ற பாடகி எஸ்.ஜானகி மைசூரில் நேற்று 88ஆவது வயதில் காலமானார்.
தென்னிந்தியாவின் இசைக்குயில் என்று அன்புடன் அழைக்கப்படும் ஜானகி மைசூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தார். முதுமைக்காலக் கோளாறுகளால் உடல்நலம் குன்றியதை அடுத்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுக் காலையில் அவரைச் சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று நண்பகலில் அவர் காலமானதாக மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு அந்நாளைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான இன்றைய ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் பிறந்தவர் எஸ்.ஜானகி. 1957ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற படத்தில் முதல் பாட்டுப் பாடினார்.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடினார். அவர் நான்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றவர். மாநில அரசுகளிடம் 33 முறை விருதுகளைப் பெற்றவர். 2013ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதை அவருக்கு இந்திய அரசு அறிவித்தபோது, அதை ஏற்க மறுத்தவர். தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறினார்.
தமது 55 ஆண்டுக்கால அனுபவத்துக்கு இந்த விருது தாமதமாக வந்துள்ளது என்று கூறிவிட்டார். இதனையடுத்து மைசூருவில் உள்ள கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகி யின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.




