
த.வெ.க.வை வீழ்த்துவதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைய வேண்டும் என்ற டி.டி.வி. தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் பா.ஜனதாவை கண்டு அனைத்து கட்சிகளும் பயப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து நிருபர்களின் கேள்விக்கு, பதிலளித்த அவர் ‘பாம்புகளை பார்த்தால் அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள்’ என்று விமர்சித்தார்.
தனது துறையில் சுதந்திரமாக செயல்படுவதாகவும் மக்கள் முன்னேற்றத்திற்காக அச்சமின்றி உழைக்க முதலமைச்சர் தனக்கு முழு அதிகாரம் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். த.வெ.க.வை வீழ்த்துவதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைய வேண்டும் என்ற டி.டி.வி. தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம் ஆகும் என்றும் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்ப்பதற்கு இணைந்தால் மட்டுமே அது சரியாக இருக்கும்’ என்று கூறினார்.





