இசைக்குயில் எஸ்.ஜானகிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.!

Advertisements

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்குத் தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் விடுத்துள்ள செய்தியில், இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபாரத் திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் சதீசன் விடுத்துள்ள செய்தியில், தனது நெஞ்சத்தின் குரலாலும், ஆழமான உணர்வுகளாலும் மலையாளத் திரையுலகத்தின் பொற்காலத்தை வடிவமைத்தவர் ஜானகி அம்மா என்று குறிப்பிட்டுள்ளார். அவர் நம்மை விட்டுச் சென்றாலும் அவர் பாடிய காலத்தை வென்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் நம்மிடையே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்தியில், தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர் ஜானகி எனத் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பதாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில், பழம்பெரும் பாடகி ஜானகி அம்மா மறைந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் ஆத்மா இறைவனின் திருவடி நீழலில் இளைப்பாற வேண்டிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில், இந்திய இசையின் இனிமையான குரலாகப் பல தலைமுறைகளைக் கடந்து, கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்த பின்னணிப் பாடகி, எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *