
தூத்துக்குடியில் பிறந்த மாவீரன் அழகுமுத்துக்கோன் தமிழக மண்ணின் வீரத்திற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியவர் எனத் தமிழக முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டுப் பதிவிட்டுள்ளார். அதில், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளில் தனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அடிமை வாழ்வைவிடச் சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தித் தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத் தளப் பதிவில், சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோனின் பிறந்தநாளில் அவருக்கு தன் வீர வணக்கம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்..



