டெல்லி பறந்தார் எடப்பாடி!

Advertisements

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும்  தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இணைந்து போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் நின்ற பாஜக அனைத்திலும் தோற்றது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வென்றது. அதேபோல் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவும் அதிமுகவும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிட்டன.

இதில் அதிமுக 179 இடங்களில் போட்டியிட்டு 66 இடங்களில் வென்றது. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. இதையடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர அதிமுக மறுத்துவிட்டது. ஆனாலும் பாஜகவும் பாமகவும் கூட்டணியாகப் போட்டியிட்டன. மூன்று கட்சிகளுமே படுதோல்வியடைந்தன.

இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காகவே பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியது. பழனிச்சாமிக்கு ஆதரவான நாகேந்திரனைத் தலைவர் ஆக்கியுள்ளது. எனினும் கூட்டணி வைத்த நாளில் இருந்தே தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷாவும் பாஜக தலைவர்களும் பேசி வருகின்றனர்.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவினரும், அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறி வருகின்றனர். வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சே தொடங்கவில்லை.

இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பை ஏற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் இருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *