நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 40ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 339 ரன்கள் குவித்தது. இதில், பென் ஸ்டோக்ஸ் 108 ரன்களும் கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் மேக்ஸ் ஓடவுட் 5 ரன்னிலும், கொலின் அக்கர்மேன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
மற்றொரு தொடக்க வீரர் வெஸ்லி பரேஸி 37 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அடுத்து டைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 33 ரன்னிலும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே தேஜா நிடமனுரு மட்டுமே 41 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக நெதர்லாந்து 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே சேர்த்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக விளையாடிய 8 போட்டிகளில் 2 தோல்வியுடன் கடைசி இடம் பிடித்த நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து 4ஆவது அணியாக பரிதாபமாக வெளியேறியுள்ளது.
இங்கிலாந்து 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடைசியாக வரும் 11ஆம் தேதி இங்கிலாந்து அணியானது பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.