
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் ஒரு இயற்கையான வானிலை நிகழ்வு. பசிபிக் பெருங்கடலில் வீசும் கிழக்கு நோக்கிய வர்த்தகக் காற்று பலவீனமடையும் போது, வெப்பமான கடல் நீர் கிழக்குப் பகுதிக்கு நகர்கிறது. இதனால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து, எல் நினோ உருவாகிறது.
எல் நினோ உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். சில இடங்களில் அதிக மழை மற்றும் வெள்ளம், மற்ற பகுதிகளில் வறட்சி மற்றும் கடும் வெப்பம் ஏற்படலாம். இந்தியாவிலும் பருவமழை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
வழக்கமாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல் நினோவின் போது கடல்நீர் சற்று வெப்பமடையும். ஆனால், தற்போது உருவாகி வரும் ‘சூப்பர் எல் நினோ’ ஒட்டுமொத்த உலக வானிலையையுமே தலைகீழாக மாற்றிப்போடும் சக்தி வாய்ந்தது. அதாவது முன்பு எப்போதும் இல்லாத வகையில், கலிபோர்னியா அருகே சுமார் 8,000 கிலோமீட்டர் நீளத்திற்கு உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து லண்டன் வரையிலான தூரம் என்று மாபெரும் கடல் வெப்ப அலையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
1870-களுக்குப் பிறகு உருவாகும் மிக வலிமையான இந்த எல் நினோ, கடல் வாழ் உயிரினங்களை அழிப்பதுடன், உலகளாவிய காலநிலை அமைப்பையே சீர்குலைக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் அமேசான் காடுகளில் கடுமையான வறட்சியையும், கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீயையும் இது உருவாக்கும்.அதே நேரத்தில், அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்குப் பெய்யும் பெருமழை, பேரழிவு வெள்ளத்தை ஏற்படுத்தும்.
சூப்பர் எல் நினோவால் இந்தியாவின் விவசாயத்தையும் வானிலையையும் நேரடியாகப் பாதிக்கவுள்ளது.கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பருவமழைக்கு முன்பே ஏப்ரல் மாதத்திலேயே 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பம் பதிவானது. ஜூன்-செப்டம்பர் தென்மேற்குப் பருவமழை பலவீனமடையும்.இதனால் வடமேற்கு இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் அழியும் என அமெரிக்காவின் S&P Global Ratings நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உணவு தானிய உற்பத்தி குறைவதால், மார்க்கெட்டில் பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்கும். இறுதியில் இது சாதாரண மக்களின் பாக்கெட்டுகளைக் காலி செய்யும் மாபெரும் பொருளாதார நெருக்கடியாக மாறும் என்று S&P Global Ratings நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயிர் இழப்புகளைக் குறைப்பதற்காக மாவட்ட ரீதியாக விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, திறமையான நீர் மேலாண்மை மற்றும் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை ஊக்குவிப்பது போன்ற முன்முயற்சிகளை இந்திய அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது
இச்சூழலில் நாம் ‘வெட்-பல்ப் வெப்பநிலை’ (Wet-Bulb Temperature) என்ற அறிவியல் விதியைப் புரிந்து கொள்ள வேண்டும். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, வெப்பமும் உயரும் போது, மனித உடலால் வேர்வை மூலம் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்ள முடியாது. இது உயிரியல் ரீதியாக மனித உயிருக்கே ஆபத்தானது. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்கத் தொடங்க வேண்டும். விவசாயிகள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


