
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதாக, அமைச்சர் அதிஷி கூறி இருக்கிறார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
இதற்கிடையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கான வாக்குமூலம் அளித்தவர் பற்றி பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி இன்று தனது சமூக வலைத்தள பதிவில் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட தகவலை தெரிவித்து இருக்கிறார்.
அந்தப் பதிவில், “டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம் அனைத்து பக்கங்களிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் சமயத்தில் தேசிய கட்சி அலுவலகத்தின் செயல்பாடுகளை எப்படி நிறுத்தி வைக்க முடியும்? இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவாலை ‘மதுபான ஊழலின் மன்னன்’ என்று அமலாக்கத் துறை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சி, இந்த வழக்கில் தொடர்புடைய அரபிந்தோ பார்மா உரிமையாளர் தேர்தல் பத்திரங்கள் மூலம் அளித்த பணம் பாஜகவுக்கு சென்றது என்று பதிலடி கொடுத்துள்ளது.
டெல்லி அமைச்சர் அதிஷி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், அமலாக்கத் துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றன. இந்த 2 வருடங்களாக எங்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரே கேள்விதான் எழுகிறது.
இத்தனை சோதனைகள் நடந்திருந்தும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், தொண்டர்களிடமிருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம் எங்கே? அந்தப் பணம் எங்கே போனது?
சரத் சந்திர ரெட்டி என்ற ஒரு நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சரத் சந்திர ரெட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு நன்கொடை கொடுத்த அரபிந்தோ பார்மாவின் உரிமையாளர்.
கடந்த 2022ம் ஆண்டு நவ.9 ஆம் தேதி இவருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அவர், தான் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததோ, அவரிடம் பேசியதோ இல்லை என்று தெளிவாகக் கூறியிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
பல மாத சிறைவாசத்துக்கு பின்னர் அவர் தனது கூற்றை மாற்றிக் கொண்டார். அவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தாகவும், மதுபான கொள்கை தொடர்பாக அவரிடம் பேசியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஊழல் செய்யப்பட்டதாக சொல்லப்படும் அந்தப் பணம் எங்கே போனது?” என்று அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவாதம் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது முதலே பாஜக, எஸ்பிஐ, மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் விவரங்களை மறைக்கவே முயற்சி செய்து வந்தன. என்றாலும் அந்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.


