
சமீபத்தில் சென்னையில் நிகழ்ச்சியில் தனிநபர் வழிபாட்டு கலாச்சாரம் எத்தகைய விபரீதமான எல்லைகளை எட்டி வருகிறது என்பதையும், அதன் பின்னணியில் ஒளிந்துள்ள கடுமையான மருத்துவ சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில், தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நடிகர் மற்றும் பாஜக நிர்வாகி சரத்குமார், ஒரு விபரீதமான விஷயத்தை முன்வைத்தார். தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ‘நாட்டாமை’ திரைப்படத்தின் பிம்பத்தை மூலதனமாக்கி, தனது ஆதரவாளர்களை ‘நாட்டாமை குடும்பம்’ என்ற முத்திரையை பச்சை குத்திக் கொள்ளுமாறு அவர் தூண்டியுள்ளார்.
உடலில் இந்தப் பச்சையை குத்தியிருக்கும் ரசிகர்கள் தன்னைத் தடையின்றி, எவ்வித அதிகாரத்துவ இடர்ப்பாடுகளுமின்றிச் சந்திக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். தான் ஏற்கனவே தனது வலது தோள்பட்டையில் தேசப்பற்றை வெளிப்படுத்த தேசியக் கொடியைப் பச்சை குத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது படப்பிடிப்புகளில் இருப்பதால் ‘நாட்டாமை’ பச்சையை உடனே குத்த முடியவில்லை என்றும், படப்பிடிப்பு முடிந்ததும் தானும் அதைப் பதிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
ஒருவர் தன் உடலில் ஒரு பிம்பத்தைப் பதிக்க விரும்பினால், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட வரலாற்று நாயகர்களைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது உங்களைப் பெற்றெடுத்த தாய்-தந்தையையோ அல்லது உங்கள் குடும்பத்தின் முன்னோர்களையோ உருவத்தையோ பச்சையாக குத்தலாம். ஆனால், தன் ஆதரவாளர்களை நடிகர் சரத்குமார் நாட்டாமை குடும்பம் என்று பச்சை குத்த வலியுறுத்தியுள்ளார். பச்சை குத்துவது தனிநபர் விருப்பம் என்றாலும், மருத்துவரீதியாக பச்சை குத்துவது என்பது பல தீங்குகளை தரும் என்கிறார்கள்.
பச்சை குத்துதல் என்பது மேலோட்டமான அலங்காரம் அல்ல, அது உடலின் மிகப்பெரிய உறுப்பான தோலில் நிகழ்த்தப்படும் ஒரு செயல்பாடு. சுத்தமில்லாத ஊசிகள் அல்லது உபகரணங்களால் பாக்டீரியா தொற்று மற்றும் வீக்கம் ஏற்படலாம். குறிப்பாக சிகப்பு, மஞ்சள் மற்றும் நீல நிற மைகள் தோலில் ஒவ்வாமை, அரிப்பு அல்லது தடிப்புகளை உருவாக்கும்.தோலில் அதிகப்படியான திசுக்கள் வளர்ந்து பெரிய தழும்புகள் உண்டாகலாம்.
கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளால் ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி போன்ற கொடிய நோய்கள் ரத்தத்தின் மூலம் பரவுகின்றன.அந்த மையில் உள்ள நுண்துகள்கள் நிணநீர் முடிச்சுகள் மற்றும் உட்புற உறுப்புகளுக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது. மேலும், பல மைகளில் ஈயம் அலுமினியம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி இதைச் செய்யவே கூடாது.
சமீபத்தில் கர்நாடகாவில் மட்டும் சுமார் 7,000 மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி. எச்.ஐ.வி பாசிட்டிவ் என்பது எய்ட்ஸ் (AIDS) நோய் அல்ல; அது வைரஸ் தொற்றின் ஆரம்பக் கட்டம் மட்டுமே. எய்ட்ஸ் என்பது அதன் இறுதி மற்றும் மிகத் தீவிரமான நிலையாகும். முறையற்ற ஊசிப் பயன்பாடு மற்றும் விழிப்புணர்வின்மையே இத்தகைய தொற்று பரவ முக்கியக் காரணமாக உள்ளது.
இந்தியாவில் பச்சை குத்தும் தொழில் ஆண்டுக்கு சுமார் ரூ. 20,000 கோடி வருவாய் ஈட்டும் ஒரு முறைப்படுத்தப்படாத வணிகமாக வளர்ந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், உள்துறை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இதற்கான முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
பச்சை குத்தும் நிலையங்களுக்குக் கட்டாய உரிமம் பெற வேண்டும் என்கிற விதி வேண்டும். இந்தியத் தர நிர்ணய அமைப்பு மைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். முறையான சம்மதம் மற்றும் சிறார்களுக்குப் பெற்றோரின் அனுமதியின்றி பச்சை குத்தத் தடை விதிக்கப்பட வேண்டும் . ராணுவம் மற்றும் போலீஸ் ஆள்சேர்ப்பு விதிகளின்படி, உடலில் பச்சை குத்தியிருப்பது தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் அது குறித்த விழிப்புணர்வு அவசியமானது.
பாதுகாப்பாக பச்சை குத்திக் கொள்வதும் மிக முக்கியமானது. ஒவ்வொரு முறையும் உங்கள் முன்னிலையிலேயே கிருமி நீக்கம் செய்யப்பட்ட புதிய ஊசி பிரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியான கப்களில் புதிய மை பயன்படுத்தப்பட வேண்டும். பச்சை குத்தும் கலைஞர் கட்டாயம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய புதிய கையுறைகளை அணிய வேண்டும். இது போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் தேவை.
தனிநபர் வழிபாடு என்ற பெயரில் உங்கள் உடலையும் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்காதீர்கள். பச்சை குத்துவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் வாழ்நாள் முழுவதையும் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம் என்பதை மறந்து விடாதீர்கள்.


