
மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் சட்டமன்ற தேர்தலில் தோல்விக் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும் புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட கூட்டணியைக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றியைக் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் பீனிக்ஸ் பறவை போல், அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.


