வடிவேலுவுக்கு எதிராக பேசக்கூடாது!

Advertisements

தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்கச் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாகப் பேச அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவதூறாகத் தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியின்போது தெரிவித்து இருந்ததாகச் சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வடிவேலு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கைத் தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.

ஆனால் வழக்கு தாக்கல் செய்தபின் எந்தப் பேட்டியும் கொடுக்கவில்லை என்றும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகக் கடைசி வாய்ப்பாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து, சிங்கமுத்துவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், வடிவேலுவுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும் படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும் பேட்டி, வீடியோக்களை நீக்கும் படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்குக் கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *