
ஆந்திர மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.வெ.க. அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800 விசைப்படகுகளும், 2 ஆயிரம் பைபர் படகுகளும் தங்குதளமாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்து சென்றாலும், கடந்த 50 வருடங்களாக ஆந்திர மீனவர்களும், தமிழக மீனவர்களும் சகோதரர்களாக மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். தமிழக மீன்பிடி படகுகளில், ஆந்திராவைச் சேர்ந்த மீனவத் தொழிலாளர்கள் பெருமளவு பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநில அரசு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஆந்திர கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது எனக் கூறி, ஜுன் மாதம் 17-ஆம் தேதி, காசிமேடு துறைமுகத்தைச் சேர்ந்த 7 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இன்றுவரை அந்த 7 விசைப்படகுகளை ஆந்திர அரசு விடுவிக்கவில்லை.
எனவே, ஆந்திர அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிக்க த.வெ.க. அரசின் முதலமைச்சர் உடனடியாக முயற்சிக்க வேண்டும் என்றும், இனியும் காசிமேடு மீனவர்களை, ஆந்திர அரசு அதிகாரிகளால் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் த.வெ.க.அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.




