டிரம்பின் வரி விதிப்பு ரத்து..!

அமெரிக்காவில் பிற நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்குக் கடுமையாக வரி விதித்த அதிபர் டிரம்பின் முடிவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் 10 விழுக்காடு என்கிற சீரான இறக்குமதி வரி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்றதில் இருந்து மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரியை 25 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை உயர்த்தினார். இதை எதிர்த்துப் பல நிறுவனங்களும் பல மாநில அரசுகளும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன. இந்த வழக்கை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அதிபர் தனது அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுள்ளதாகக் கூறிக் கடுமையான வரி விதித்த முடிவை ரத்துச் செய்துள்ளது.

இந்தத் தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள டிரம்ப், இது பயங்கரமானது என்றும், தனது வணிகக் கொள்கையை நிராகரித்தது முட்டாள்தனமானது என்றும் கூறியுள்ளார்.
முந்தைய வரி விதிப்பை உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்துள்ள நிலையில் அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் சீராக 10 விழுக்காடு வரி விதிப்பதாகவும், அதை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *