தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு முதலமைச்சர் கொண்டு வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, 221 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி கூடுதல் வாக்குகளைப் பெற்றதாகவும், அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்லும் என்றும் தெரிவித்தார்.
களிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் தமிழ்நாட்டில் 1 கோடியே 15 இலட்சம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று வருவதாகக் குறிப்பிட்டார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13 விழுக்காட்டை எட்டியது என்றும், அதன் பின்னர் இப்போது 11 விழுக்காடு என்னும் இரட்டை இலக்க வளர்ச்சியை மீண்டும் எட்டியுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சோழவழம் ஒன்றியச் செயலாளர்கள் செல்வசேகரன், ஆனந்தன், இளைஞர் அணித் துணை அமைப்பாளர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
