இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் வந்த தென்கொரிய அதிபர்.!

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென்கொரிய அதிபருக்குத் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், அவர் மனைவி கிம் ஹியா கியுங் ஆகியோர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் அவர்களுக்கு இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உடனிருந்தனர்.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் தங்கள் நாட்டின் பிரதிநிதிகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். பாரம்பரிய முறைப்படியான வரவேற்புக்குப் பின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தென்கொரிய அதிபரும் அவர் மனைவியும் புறப்பட்டனர்.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், அவர் மனைவி கிம் ஹியா கியுங் ஆகியோர் தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பின் அங்குள்ள பார்வையாளர் வருகைப் பதிவேட்டிலும் கையொப்பமிட்டனர்.

இந்தியா – தென்கொரியா இடையான உச்சி மாநாடு ஒரு திருப்பு முனையாகும் என்றும், இது இருநாடுகளிடையான உறவை முற்றிலும் புதிய நிலைக்குக் கொண்டுசெல்லும் என்றும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *